(தி.மலை) மக்களை திட்டங்கள் நேரடியாக சென்றடைய ஊராட்சி செயலக கட்டுமான பணிகள் தீவிரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 கட்டிடங்கள்

கலசபாக்கம், மார்ச் 18: திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடைய ஊராட்சி செயலக கட்டிடங்கள் கட்டும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு ஊராட்சி நிர்வாகம் குறித்து பொதுமக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள தற்போது ஊராட்சி தொடர்பான திட்டங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் இணையதளத்தின் மூலம் செலுத்திட பணிகள் முடிவடைந்துள்ளன. ஊராட்சி சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை எதிர்காலத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் செலுத்தலாம். பல்வேறு துறைகள் மூலம் பொது மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக பொதுமக்களுக்கு சென்றடையவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் ஊராட்சி மானியங்களின் நிதி மூலம் ஊராட்சி செயலக கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலா ₹42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலக கட்டிடத்தில் விஏஓ அலுவலகம் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி செயலர் அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலக கட்டிடங்கள் ஒரே இடத்தில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் பல்வேறு துறை திட்டங்களை பெற அரசு அலுவலகங்களுக்கு தனித்தனியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஒரே இடத்தில் பொதுமக்கள் சென்று தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். 1568 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் கட்டிடத்திற்கு 50 சதவீதம் 100 நாள் வேலை திட்டத்தின் மூலமும் 50 சதவீதம் ஊராட்சி மானியங்களின் நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2022-2023 ஆம் நிதி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சாபுரம் 1, போளூர் 1, கலசப்பாக்கம் 2, சேத்பட்டு 2, செங்கம் 1, புதுப்பாளையம் 6, தண்டராம்பட்டு 3, வந்தவாசி 1, தெள்ளார் 1, பெரணமல்லூர் 1 என 10 ஒன்றியங்களில் 19 கிராம செயலக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன்படி கலசப்பாக்கம் ஒன்றியத்தில் கெங்கல மகாதேவி, மேல்சோழங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கிராம செயலக கட்டிடம் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கெங்கல மகாதேவி கிராமத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன தொடர்ந்து படிப்படியாக அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊராட்சி செயலக கட்டிடங்கள் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் கிராம மக்கள் ஒரே இடத்தில் பல்வேறு துறை சார்ந்த சான்றிதழ்களையும் திட்டங்களையும் நேரடியாக பெற முடியும்.

Related Stories: