மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹9.39 கோடி ஒதுக்கீடு

நாமக்கல், மார்ச் 18: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென, இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை பரிவுடன் கவனித்துக் கொள்ளவும், அவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி அவர்களை சென்றடையவும் இத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 வகை திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் சாதாரண நபருக்கு ₹25,000 மற்றும் படித்த பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ₹50,000 தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தொகை, தற்போது முழுவதும் ரொக்கமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டிற்கு ₹3.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடையோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ₹1,500 லிருந்து ₹2,000 உயர்த்தப்பட்டது. இதற்காக 2022-23ம் நிதியாண்டிற்கு ₹9 கோடியே 39 லட்சத்து 63,805 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,354 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள, கூடுதலாக மாதம் ₹1,000 வழங்கும் திட்டத்தில் 2022-23ம் நிதியாண்டிற்கு ₹4 லட்சத்து 7,910 ஒதுக்கீடு செய்யப்பட்டு 40 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

மாவட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில், 197 பார்வையற்றோருக்கும், 75 காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 45 அறிவுசார் குறைபாடுடையோருக்கும் மற்றும் 98 கை, கால் பாதிக்கப்பட்டோருக்கும் என மொத்தம் 415 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில், கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற உபகரணங்கள் 1,543 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் பயனடைந்த திருச்செங்கோடு தாலுகா கல்லிமேடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேந்திரன் கூறுகையில், ‘சுபநிகழ்ச்சிகளுக்கு சீரியல் லைட் அமைக்கும் பணி செய்து வருகிறேன். தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் துறையை, தனது கட்டுப்பாட்டில் வைத்து என்னை போன்று அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை திட்டத்தில் நிதி உதவி உயர்த்தி வழங்கி இருக்கிறார்கள். எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கியதன் மூலம், வேலைக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி,’ என்றார்.

Related Stories: