3 வட்டாரங்களில் சுகாதார திருவிழா

நாமக்கல், மார்ச் 18: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் ஒரு மருத்துவ முகாம் வீதம், 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. இன்று (18ம்தேதி) பரமத்தி வட்டாரத்தில் பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெறுகிறது. நாளை (19ம்தேதி) எருமப்பட்டி வட்டாரத்தில் தூசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கம் ஆகிய இடங்களில் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது. தொலைதூரங்களில் வசிக்கும், கிராம மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுனர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

இதில் தாய் சேய்நலம், குழந்தைகள் நலம், தொற்றா நோய்கள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய், காது மூக்கு தொண்டை, கண் மருத்துவம், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள், தோல் மருத்துவம் மற்றும் காசநோய் உட்பட அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேல் சிகிச்சை எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உயர் மருத்து வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: