கோம்புபள்ளம் ஓடையில் 50 டன் கழிவுகள் அகற்றம்

குமாரபாளையம், மார்ச் 16: நான்கு வருடங்களாக வாரப்படாத கோம்பு பள்ளத்தை தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியின் முதல் நாளில் 50 டன் கழிவுகள் அகற்றப்பட்டது.குமாரபாளையம் நகராட்சியில், காவல் நிலையம் பின்புறமுள்ள கோம்பு பள்ளம் ஓடை கடந்த 4 வருடங்களாக தூர்வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் நிரம்பி கழிவுகள் தேங்கியது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். காவல் நிலையம் பின்புறத்திலிருந்து சேலம் ரோடு வரையில் ₹99 லட்சம் செலவில் நமக்கு நாமே திட்டத்தில் கோம்புபள்ளம் ஓடை விரிவாக்க பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  இதையடுத்து காவல்நிலையம் பின்புறமுள்ள பழைய ஓடையை தூர்வாரும் பணியில் ஒட்டு மொத்த பணியாளர்களும் ஈடுபட்டனர். முதல் நாளே 50 டன் எடையுள்ள கழிவுகள் டிப்பர் லாரியில் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இப்பணியினை நகர மன்ற தலைவர் விஜயகண்ணன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பொறியாளர் ராஜேந்திரன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: