டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மல்லசமுத்திரம், மார்ச் 14: மல்லசமுத்திரம் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் டிராக்டரை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முஞ்சனூர் ஊராட்சி, கோங்கரை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் சார்பில் கல்குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதற்காக பூமிபூஜை நேற்று காலை நடைபெற இருந்தது. பூமிபூஜை போட டிராக்டர் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டது. அப்பகுதி மக்கள் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டிராக்டரை சிறைபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் ஓடை, விவசாய நிலம், கிணறுகள் உள்ளது. கல்குவாரி அமைத்தால் நீர்நிலைகள் மாசுபடும். எனவே, இந்த பகுதியில் குவாரி அமைக்க கூடாது,’ என்றனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வி.ஏ.ஓ ஈஸ்வரி மற்றும் எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குலசேகரனை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர். முறையான எல்லை வரையறை செய்த பின்னரே, கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: