வேலூர், மார்ச் 12: வேலூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்2 பொதுத்தேர்வை 17 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகள் பணிகளில் பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிளஸ்2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. பிளஸ்1 பொதுத்தேர்வு நாளை மறுதினம் தொடங்குகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 81 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பிளஸ்2 தேர்வை அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்த்து 8 ஆயிரத்து 247 மாணவர்களும், 8 ஆயிரத்த 723 மாணவிகள் என மொத்தம் ₹16 ஆயிரத்து 970 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
நாளை மறுநாள் தொடங்கும் பிளஸ்1 தேர்வை 6 ஆயிரத்து 185 மாணவர்களும், 7 ஆயிரத்த 707 மாணவிகள் என மொத்தம் ₹13 ஆயிரத்து 892 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். பிளஸ்2 தேர்வையொட்டி தேர்வு அறைகளில் மாணவர்களின் ஹால்டிக்கெட் எண்களை எழுதுவது உள்ளிட்ட முன்னேறபாடுகள் பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகல்வித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கூறுகையில், ‘பொதுத்தேர்வின் ஒருபகுதியாக பிளஸ்2 மற்றும் பிளஸ்1 தேர்வு பணியில் 81 முதன்மை கண்காணிப்பு அலுவலர், 89 பறக்கும் படையினர், 1,074 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வை எவ்வித புகார்களுக்கு இடமில்லாமல், சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.