குறைதீர்வு நாள் முகாம்களில் 334 மனுக்களுக்கு உடனடி தீர்வு அதிகாரிகள் தகவல் வேலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட

வேலூர், மார்ச் 12: வேலூர் மாவட்டத்தில் 6 தாலுகாவில் நேற்று நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு நாள் முகாமில் 334 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், 2வது சனிக்கிழமையான நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. அதன்படி, வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிங்கிரிகோயில், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மேல்பள்ளிப்பட்டு, காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட உள்ளிப்புதூர், குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்பட்டி, கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட காங்குப்பம், பேர்ணாம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட நலங்கநல்லூர் ஆகிய கிராமங்களில் நேற்று சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது.

இந்த சிறப்பு முகாம்களில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல், செல்போன் எண் மாற்றம், பதிவு செய்ய, புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை உள்ளிட்ட ரேஷன் கார்டு சம்பந்தபட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் 339 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 334 மனுக்களுக்கு உடடினயாக தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. இதில் அணைக்கட்டு தாலுகாவில் 55 மனுக்களில் 54 மனுக்களுக்கு தீர்வும், குடியாத்தம் தாலுகாவில் 52 மனுக்களில் 48 மனுக்களுக்கு தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள 5 மனுக்கள் பரீசிலனையில் உள்ளது. வேலூர் தாலுகாவில் 84 மனுக்களும், கே.வி.குப்பம் 40 மனுக்களும், காட்பாடி தாலுகாவில் 52 மனுக்களும், பேரணாம்பட்டு தாலுகாவில் 56 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது’ என்றனர்.

Related Stories: