சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் அசுர வேகத்தில் பணி 844 பேருந்து நிழற்குடைகள் சாலை அமைக்கும் பணி தீவிரம்: புதுப்பொலிவு பெறும் சென்னை மாநகரம்

சென்னை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகள் புதுப்பொலிவை பெற்று வருகிறது. மழையின்போது மக்கள் வெள்ளநீரில் சிக்கித் தவிக்காமல் இருக்க எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவோ, அதேபோல, இப்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. அதற்காகவும் மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் முறையாக பேருந்து நிழற்குடைகள் பராமரிக்கப்படாததால், சென்னை மாநகர பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆங்காங்கே நிழற்குடைகள் பராமரிப்பில்லாமல் பல்வேறு இடங்களில் பயணிகள் அமர முடியாத நிலையில்தான் இருந்தன. இல்லாவிட்டால்  அலங்கோலமாக காட்சி அளித்த நிலையில் காணப்பட்டன.

 

தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அவற்றை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாடல் நிழற்குடைகளாக மாற்றும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னையை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில், மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் அசுர வேகத்தில் நடந்தது.  அப்போது, பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டதால், பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன. மேலும், சாலைகளும் பல இடங்களில் சேதமடைந்து கிடந்தது. இதனால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மழைக்கு ஒதுங்க முடியாமல் தவித்தனர். சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர். எனவே, மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும் நிழற்குடைகளை சீரமைக்கவும், புதிதாக அமைக்கவும் மற்றும் சாலைகள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

 இந்நிலையில், சென்னை நகரில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடைகளை புதுப்பிக்க மேயர் பிரியா தலைமையில் கூடிய மாதாந்திர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறையாக 844 பேருந்து நிழற்குடைகளை புரனமைக்க மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இந்த நிழற்குடைகளைச் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த பணிகளைச் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் நடுரோட்டில் பயணிகள் காத்து கிடக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. மேலும், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலிலிருந்து பயணிகளைக் காக்கும் வகையிலும், சிங்கார சென்னையாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையிலும் சென்னை மாநகராட்சி மாநகரம் முழுவதும் நிழற்குடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடக்க தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முடிவடையும் போது பேருந்து நிறுத்தங்கள் அனைத்தும் அழகுபடுத்தப்பட்ட நிழற்குடைகளுடன் ஜொலிக்கும் என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.  அதேபோன்று, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பணிகளால் பெரிய அளவில் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் வசதிக்காக மழைநீர் வடிகால் பணிகள் முடிய முடிய அந்த பகுதிகளில் சேதமடைந்த சாலைகளில் பேட்ஜ் ஒர்க் மட்டுமே நடந்தது. இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் சாலைகள் சீரமைக்கும் பணிகளை தொடங்காமல் மழை காலம் முடியும் வரை மாநகராட்சி ஒத்தி வைத்திருந்தது. தற்போது மழைநீர் வடிகால் பணிகளும்  முடிந்து விட்டது, மழை காலமும் முடிந்து விட்டது. இதனால் சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகளையும் முழு வீச்சில் மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது, ரூ.43.20 கோடி செலவில் 362 சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் 6 மண்டலங்களில் 62.73 கி.மீ தூரத்திற்கு 362 சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.43.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  மேலும், ராயபுரம், மணலி, திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி ஆகிய பகுதிகளில் 45.5 கி.மீ., நீளத்திற்கு 334 சாலைகள் ரூ.25.20 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, ரூ.18 கோடியில் 17.23 கி.மீ.க்கு 28 பேருந்து சாலைகள் அமைப்பதற்கான பணி ஆணை கடந்த பிப்ரவரி 18 அன்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை அமைக்கும் பணிகளை நவீனமான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உட்புற மற்றும் பேருந்து சாலைகளை அமைப்பதற்கு முன்னதாக, தற்போதுள்ள சாலையை முழுவதுமாக அரைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இரவு நேரங்களில் மட்டுமே இப்பணிகளை செய்ய வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றத்தைக் குறிக்கும் வகையில் கட்டாயம் சாலைகளில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த பணிகளை இரவு நேரங்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் புத்தம் புதிதாக போடப்பட்டு வருவதால், அவை அனைத்தும் புதுப்பொலிவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நிழற்குடை அமைக்கும் பணிகள் ஒரு பக்கம், மறுபுறம் புதிய சாலைகள் போடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதால் கூடிய விரைவில் சென்னை மாநகர சாலைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் புதுப் பொலிவுடன் மிளிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: