செல்போன் டவர் மீது ஏறி ஆட்டம் காட்டிய சென்னை போதை ஆசாமி

* கிராம இளைஞர்கள் மீட்டனர்

* எச்சரித்து அனுப்பிய போலீசார்

செய்யாறு அருகே குடும்ப தகராறில்

செய்யாறு, மார்ச் 7: செய்யாறு அருகே குடும்ப தகராறில் செல்போன் டவர் மீது ஏறி ஆட்டம் காட்டிய சென்னை போதை ஆசாமியை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிராம இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட ஆசாமியை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புரிசை கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி வயது முதிர்வின் காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்தார். இவரது ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்னை படப்பை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த அவரது மகள் கற்பகம், கணவர் குமார்(50), மகன் பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்திருந்தனர்.

16ம் நாள் காரியம் முடிந்த நிலையில் நேற்று சின்னசாமி குடும்பத்தில் கசப்பு தலை நிகழ்வில் ஈடுபட்டனர். அப்போது பிற்பகல் 3 மணி அளவில் கட்டிட தொழிலாளியான குமார் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறு பிரச்னையில் கோபித்துக் கொண்ட குமார் திடீரென வீட்டில் அருகே இருந்த 110 அடி உயரமுள்ள செல்போன் டவரில் உச்சிக்கு மட மடவென ஏறி குடும்பத்தினரை அச்சுறுத்தினார். இதைப்பார்த்து அதிர்ச்சிடைந்த அப்பகுதி இளைஞர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ‘கிட்டே வந்தால் குதித்து விடுவேன்’ என குமார் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் எச்சரித்தும் அவர் கீழே இறங்கவில்லை. பின்னர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரந்தாமன் உதவியுடன் கிராம இளைஞர்கள் செல்போன் டவர் மீது ஏறி குமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரை பத்திரமாக கீழே மீட்டு வந்தனர். பின்னர் போலீசார் போதையில் இருந்த குமாரை எச்சரித்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: