வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் புத்தாக்க பயிற்சியில் டிஐஜி உத்தரவு

வேலூர், மார்ச் 5: வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை சம்பந்தப்பட்ட நபரை தவிர புரோக்கரிடம் வழங்கக்கூடாது என்று புத்தாக்க பயிற்சி முகாமில் டிஐஜி உத்தரவிட்டார். வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு, ஆகிய 5 பதிவு மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள 45 சார்பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் பதிவு மண்டலத்தில் பணியாற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 200 பேருக்கான, ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. வேலூர் பதிவு மண்டல டிஐஜி சுதாமல்யா தலைமை தாங்கினார். மாவட்ட பதிவாளர்கள் சுடரொளி, தர், வெங்கடேசன், வாணி, அறிவழகன், செல்வநாராயணசுவாமி, சக்திவேல், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பதிவு மண்டல நிர்வாக சார்பதிவாளர் உமாபதி வரவேற்றார். இதில் வேலூர் பதிவு மண்டல டிஐஜி சுதாமல்யா பேசியதாவது: பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் சிடி பதிவாளர், டேட்டா ஆபரேட்டர்கள் முறையாக சிடி காட்சிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் தொய்வின்றி உடனடியாக வழங்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபரை தவிர, புரோக்கர் மற்றும் 3வது நபரிடம் வழங்கக்கூடாது. தினமும் காலை 10 மணிக்கு லாகின் செய்து பதிவு பணிகளை தொடங்க வேண்டும். பத்திரங்கள் பதிவின்போது காலதாமதம் ஏற்படாத வகையில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பத்திரங்களை அன்றைய தினமே பொதுமக்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்பவர்களிடம் இருந்து புகார்கள் வராதபடி கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பதிவின்போது உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்து பதிவு மேற்கொள்ள வேண்டும்.

போலி ஆவணங்கள் இருந்தால் பத்திரப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவுசெய்த பத்திரங்களை ரத்து செய்வது, பதிவு அலுவலகம் மாற்றி பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories: