சென்னையில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பைக் திருடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் ஜீவன்லால் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). இவர், கடந்த 30ம் தேதி தனது பைக்கை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்தியபோது, திருடுபோனது. அதிர்ச்சியடைந்த நாகேந்திரன் இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அயனாவரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

அவரை கைது செய்து நடத்திய விசாரணையில், ரயில்வே துறையில் பணியாற்றி வந்தபோது, பூக்கடை பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடிய வழக்கில் சிறைக்கு சென்றதால், ரயில்வே வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், பூக்கடை, யானைக்கவுனி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை திருடி, அதனை புதுப்பேட்டை பகுதியில் குறைந்த விலைக்கு விற்று, உல்லாச வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: