(தி.மலை) அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் பால்குடம் ஏந்திய 2 ஆயிரம் பெண்கள் செய்யாறில் 10ம் நாள் வசந்த உற்சவம்

செய்யாறு, பிப்.28: செய்யாறில் வசந்த உற்சவத்தின் 10வது நாளான நேற்று பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா சிவராத்திரி மயான கொள்ளையையொட்டி, செய்யாறு காமராஜ் நகர் மார்க்கெட் சந்தை திடலில் உள்ள அங்காளம்மன் கோயிலில் 71வது ஆண்டு வசந்த உற்சவம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் 10ம் நாளான நேற்று பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, 2 ஆயிரம் பெண் பக்தர்கள் செய்யாறு ஆற்றையொட்டியுள்ள அனக்காவூர் ஞானமுருகன்பூண்டி முருகன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். மேலும், கரகம் ஆடியபடி பக்தர்கள் அலகு குத்தியும், வாகனங்களை இழுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, காந்தி சாலை மார்க்கெட்டில் உள்ள அங்காளம்மன் கோயிலில் பால் அபிஷேகம் செய்தனர். மாலை தீமிதி விழா நடந்தது. இரவு அம்பாள் மகிஷாசூர மர்த்தினி அலங்காரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், விழா குழுவினரும் செய்தனர். அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க செய்யாறு மற்றும் அனக்காவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: