சென்னை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை காணவில்லை எனக்கோரியும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் தாக்கல் செய்தார்.