சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு கடந்த 25ம் தேதி நடந்தது. 186 இடங்களில் 280 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் நடந்த தேர்வில் வருகைப்பதிவேட்டில் உள்ள பதிவெண்ணும், வினாத்தாள் பதிவெண்ணும் மாறி இருந்ததால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னை உள்பட பெரும்பாலான தேர்வு மையங்களில் தேர்வு தாமதமாகவே தொடங்கி நடந்து முடிந்தது. சில தேர்வு மையங்களில் வினாத்தாள் பதிவெண் மாறி இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், அவர்களிடம் இருந்து வினாத்தாள் பெறப்பட்டு, சற்று நேரம் கழித்து கொடுக்கப்பட்டது.
இந்த இடைவெளியை பயன்படுத்தி சிலர் தேர்வு அறைக்கு வெளியே வந்து செல்போன், புத்தகங்களில் அதற்கான விடையை கண்டுபிடித்து எழுதியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இருந்த போதிலும் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகஸே்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. விரைவில் விளக்கம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.