சேந்தமங்கலம், பிப்.28: சேந்தமங்கலம் பெருமாள் கோயில் மாசி மக தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்றதால், தேர்த்திருவிழா நடைபெறவில்லை. நடப்பாண்டு மாசி மக தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 5ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பெருமாள் சாமி புறப்பட்டு சோமேஸ்வரர் கோயில் தெப்பக் குளத்திற்கு சென்று, சோமேஸ்வரர் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு, வான வேடிக்கைகளை பார்த்துவிட்டு குதிரை வாகனத்தில் கோயில் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தாண்டு குதிரை வாகனம் தூக்கும் முறை செல்லப்பம்பட்டி ஊர் பொதுமக்களை சார்ந்ததாகும். 6ம்தேதி மாலை பெருமாள் பெரிய தேரோட்டமும், 8ம்தேதி சோமேஸ்வரர் சின்ன தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்க்கார் ரமேஷ், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.