நாமக்கல் மாவட்டத்தில் 3884 பேர் பயன்

நாமக்கல்: இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 3884 பேர் பயன் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ₹3.13 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சுகாதாரத்துறை மூலம், மக்களை தேடி மருத்துவம், கலைஞரின் வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், 45 வயதுக்கு மேற்பட்ட ரத்த அழுத்த நோயாளிகளின் வீடுகளுக்கேத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வீட்டுக்கே சென்று வழங்கப்படுகிறது. அதனால் தான், இத்திட்டத்தின் பயன் அடித்தளத்தில் உள்ள மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. ஏழை, எளியோர் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல் நலம் குறித்த ஆலோசனை இந்த முகாமில் வழங்கப்படுகிறது. அதே போல், சாலைகளில் எதிர்பாராத வகையில் ஏற்படும் விபத்துகளில், பாதிக்கப்படுவோர்களின் உயிரை காக்கும் வகையில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தையும் தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழக அரசே மேற்கொள்கிறது. இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 9 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவரும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைபவர்கள், நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

அதற்கு மேலும், தொடர் சிகிச்சை தேவைப்படும் போது, அந்த மருத்துவமனையிலேயே, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறமுடியும். நாமக்கல் மாவட்டத்தில், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 17 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகளில் இதுவரை 2787 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதே போல், தனியார் மருத்துவமனைகளில் 1107 பேர், இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். இவர்களுக்கு ₹3.13 கோடிக்கு அரசின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: