தாறுமாறான மாணவர்களின் தலைமுடி அலங்காரத்தை சீரமைத்த தலைமை ஆசிரியர் வேலூர் ஊரீசு அரசு நிதியுதவி பள்ளியில்

வேலூர், பிப்.23: வேலூர் ஊரீசு அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களின் தாறுமாறான தலைமுடி அலங்காரத்தை பள்ளி தலைமை ஆசிரியர் சவரத்தொழிலாளர்கள் மூலம் சீர் செய்தார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் தலைமுடி அலங்காரத்தை தாறுமாறாக வெட்டிக் கொண்டும், அதில் சாயத்தை பூசிக்கொண்டும் பள்ளிகளுக்கு வருகின்றனர். அதோடு அவர்களது பள்ளி சீருடையில் கால்சட்டையை முக்கால் பேன்டாக அணிந்து கொண்டும் பள்ளிக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிஇஓ முனிசாமி முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு ஒழுங்கான முறையில் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக பெற்றோர்களுடன் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நேற்று காலை வேலூர் ஊரீசு அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று தாறுமாறான வகையில் தலை அலங்காரத்துடன் வந்திருந்த மாணவர்களை தனியாக அழைத்து ஒவ்வொருவருக்கும் சவரத்தொழிலாளர்கள் மூலம் சொந்த செலவில் சீராக முடியை வெட்டி சீரமைத்தார். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறும்போது, ‘தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமாக பள்ளிக்கு சென்று வருவதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்கள் ஒழுக்கமானவர்களாக வளர்ந்தால்தான் பள்ளிக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பெருமை’ என்றார்.

படவிளக்கம்வேலூர் ஊரீசு அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் சவரத்தொழிலாளர்கள் மூலம் தலைமுடி சீரமைக்கப்பட்டது.

Related Stories: