சென்னை, பிப்.21: சென்னை மாநகரில் பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக தி.நகர் திகழ்கிறது. இங்குள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு, பனகல் பார்க் அருகில், சத்யா பஜார் உள்ளிட்டவற்றில் ஏராளமான கடைகள் இருக்கின்றன. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது. மொத்தமாகவும், சில்லறையாகவும் பொருட்கள் வாங்க வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பலரும் தி.நகர் வந்து செல்வதால், எப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படும். குறிப்பாக, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி தெருக்கள் நிரம்பி வழியும். மேலும், முக்கிய தெருக்களில் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்த பகுதியாக தி.நகர் உள்ளது.
இந்நிலையில், பாதசாரிகள் வசதிக்காக, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு ஆகாய நடைமேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்மூலம் ஓரளவு நெரிசலை குறைக்கலாம் என திட்டமிடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன.