ஜோலார்பேட்டை சிறுவிளையாட்டு அரங்கில் பொதுப்பிரிவினருக்கான விளையாட்டு போட்டி எஸ்பி தொடங்கி வைத்தார்

ஜோலார்பேட்டை, பிப்.21: ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பொதுப்பிரிவினருக்கு நேற்று நடந்த வாலிபால் போட்டியை எஸ்பி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2022-2023ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 15 வயது முதல் 35 வயது உட்பட்ட பொதுமக்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் நேற்று பொதுப்பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுப்பிரிவு ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதில் கபடி, வாலிபால், இறகுப்பந்து போன்ற போட்டிகள் நடந்தது. அப்போது, சிறு விளையாட்டு அரங்கிற்கு வந்த எஸ்பி பாலகிருஷ்ணன் பொதுப்பிரிவினருக்கு நடைபெறும் வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட அளவிலான பொதுப்பிரிவினருக்கு நடைபெற்ற கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோலார்பேட்டை பிகே.ஸ்போர்ட்ஸ் அணியினர் முதலிடத்தையும், ஏலகிரி கிராமம் செந்தமிழ் அணியினர் இரண்டாம் இடத்தையும், ஒட்டப்பட்டி அடுத்த கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த தமிழ்சிங்கம் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். மேலும், பெண்கள் பிரிவில் பிகே.ஸ்போர்ட்ஸ் அணியினர் முதலிடமும், வாணியம்பாடி அணியினர் இரண்டாம் இடமும், ஜோலார்பேட்டை அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார் உட்பட பலர் பங்கேற்று விளையாட்டு போட்டிகளை கண்காணித்தனர்.

(கேப்சன்)

ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் நேற்று பொதுப்பிரிவினருக்கான வாலிபால் போட்டியை எஸ்பி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அடுத்த படம்: கபடி போட்டியில் முதலிடம் பிடித்த பி.கே.ஸ்போர்ட்ஸ் அணியினரை எஸ்பி பாலகிருஷ்ணன் பாராட்டினார். உடன் உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார் உள்ளிட்டோர்.

Related Stories: