பொன்னை அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் உயிருடன் மீட்பு

பொன்னை, பிப்.21: பொன்னை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 மான்களை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். பொன்னை அடுத்த தீயார்குப்பம் கிராமத்தில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. நேற்று மதியம் 2 மணியளவில், தண்ணீரை தேடி ஊருக்குள் வந்த தாய் மற்றும் குட்டி மான் திடீரென இவரது கிணற்றில் தவறி விழுந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சோளிங்கர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரபீக் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 2 மான்களை பாதுகாப்பாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், படுகாயம் அடைந்திருந்த தாய் மானுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அங்கு வந்த வனவர் கருணாவிடம் அந்த மான்களை ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த 2 மான்களும் மகிமண்டலம் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.

Related Stories: