காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க ₹2.50 லட்சம் நிதியுதவி கலெக்டரின் முன்னிலையில் வழங்கிய சமூக ஆர்வலர்கள் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த துப்புரவுப் பணியாளரின் மகளுக்கு

வேலூர், செப்.30: வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த துப்புரவுப் பணியாளரின் மகளுக்கு காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பங்கேற்க ₹2.50 லட்சம் நிதியுதவியை கலெக்டர் முன்னிலையில் வீராங்கனையிடம் சமூக ஆர்வலர்கள் வழங்கினர். வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் டி.கவிதா(22) இளங்கலை உடற்கல்விப் பட்டப்படிப்பு முடித்துள்ளார். முதலில் இவர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளுதூக்கும் உடற்பயிற்சி மையத்தில் சேர்ந்து பளுதூக்கும் விளையாட்டில் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டார். பின்னர் குத்துச்சண்டை விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். இந்நிலையில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்ற சிறந்த வலுதூக்கும் வீராங்கனை என்ற பட்டம் பெற்றார்.

இதற்கிடையில் நியூசிலாந்தில் வருகிற நவம்பர் மாதம் 24ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்ள கவிதா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் போட்டியில் பங்கேற்க ₹3 லட்சம் செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த பணத்தை அவரால் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் தனது விருப்ப நிதியிலிருந்து ₹50 ஆயிரத்தினை முதன்முதலில் வழங்கி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஊக்கப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து இந்த ஏழை வீராங்கனையின் பயிற்சியாளரான யுவராஜ் விடாமுயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே ேவலூரை சேர்ந்த எட்வின் ஷார்ஜா மன்னரது அலுவலகத்தில் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மாணவிக்கு உதவி தேவை என்பதை அறிந்த எட்வின் அவரது சகோதரர் ரோசாரியோ மூலம் ₹2.50 லட்சம் நிதியுதவியை வீராங்கனை கவிதாவுக்கு வழங்க முன்வந்தார்.

பின்னர் சமூக ஆர்வலர்கள் பட்டுக்கோட்டை குருமூர்த்தி, மலை அர்ச்சுன்ன், நம்பி பாஸ்கரன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆறுமுகம், அன்பு, சுரேஷ், பிரகாஷ் நாராயணமூர்த்தி மற்றும் தமிழரசன் ஆகியோர் நேற்று பணத்துடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் கவிதாவுக்கு ₹2.50 லட்சத்தை வழங்கினர். வலுதூக்கும் வீராங்கனை விளையாட்டில் சிறந்து விளங்கி மென்மேலும் வெற்றிகள் குவிக்கும் வகையில் சிறப்பாக விளையாட கலெக்டர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சத்துவாச்சாரி பளுதூக்கும் பயிற்சி மைய மேலாளர் நோயலின் ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: