ஆத்தூர் தொகுதியை சேர்ந்த 2,167 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடியில் நலத்திட்ட உதவி: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

திண்டுக்கல், ெசப். 30: ஆத்தூர் தொகுதியை சேர்ந்த 2,167 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சி முத்தாலம்மன் கோயில் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகிக்க, எம்பி வேலுச்சாமி, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், டிஆர்ஓ லதா முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு, 2,167 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி  பேசியதாவது, ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதன் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தபோதிலும், தடுப்பூசிகள் செலுத்தும் பணியை திறம்பட மேற்கொண்டு, தமிழகத்தில் சுமார் 7 கோடி மக்களை பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டார்.

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் புதுமைப்பெண் திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுயஉதவி குழுவினரின் ரூ.2,755 கோடி அளவிலான கடன்தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 15.5 லட்சம் மகளிர் குழு உறுப்பினர்கள் பயனடைகின்றனர். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும்.

கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு குறைந்த வட்டியில், கூடுதல் தொகை கடனுதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி, மீன் வளப்பு பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவுத்துறை மூலம் ரூ.589 கோடி கடன் வழங்கி உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ, மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல வழிவகை செய்யும் வகையில் தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அகரம் பேரூராட்சி கோயில் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை, வடிகால் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆத்தூர் தொகுதியில் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு பேசினார். இதில் ஆர்டிஓ பிரேம்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சரவணன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் காந்திநாதன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஜெயன்ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,

துணை செயலாளர் பிலால் உசேன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணை தலைவர் ஜெயபால், செயல் அலுவலர் ஈஸ்வரி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணை தலைவர் நாகப்பன், பேரூர் கழக செயலாளர் ராமலிங்கசாமி மற்றும் அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: