மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3.84 லட்சம் பேருக்கு சிகிச்சை

சேலம், செப். 29: சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உடைய 3.84 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே மருத்துவக்குழு செல்வது மக்களிடம் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார களப்பணியாளர்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றனர். இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று மருந்து பெட்டகத்தையும் வழங்கினார்.

இந்த திட்டத்தில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்பு உடையவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் விநியோகம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை மருத்துவ சேவை, சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், உள்ளிட்ட சுகாதார சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1 கோடி பேர் வரை பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் பெண் சுகாதார தன்னார்வலர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர்கள் ஆகிய களப்பணியாளர்கள் மூலம் சேவைகள் அளிக்கப்படுகிறது. மேலும், நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள் தொற்றா நோய் சேவைகளை வழங்குகின்றனர். மேலும், கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படுகின்றவர்களுக்கும் தொடர் சேவை அளிக்கப்படுகிறது. அவசர கால ஆம்புலன்ஸ் இணைக்கப்பட்டு, மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

இந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புடகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தொடர் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, சேலம் சுகாதார மாவட்டத்தில் துணை இயக்குநர் நளினி தலைமையிலும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் துணை இயக்குநர் ஜெமினி தலைமையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 3,84,197 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 5,63,190 பேருக்கு தொடர் சிகிச்சையும் என ஒட்டு மொத்தமாக 9,47,387 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு மருத்துவர்கள் வீடுகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 24,78,671 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்ட 1,61,819 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 1,56,834 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 1,13,877 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 2,01,196 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய 2 நோய் பாதிப்புடகளுடன் உள்ள 87,938 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 1,64,998 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. நோய் ஆதரவு சிகிச்சையை 7,962 பேருக்கு முதன் முறையும், 17,467 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. பிசியோதெரபி சிகிச்சையை 12,599 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 22,673 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சிறுநீரக பாதிப்பால், 4 பேருக்கு வீடுகளுக்கு சென்று, 15 நாட்களுக்கு ஒரு முறை டையாலிசிஸ் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 3,84,197 பேருக்கு முதன் முறை சிகிச்சையும், 5,63,190 பேருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே மருத்துவகுழு நேரடியாக செல்வதால் இந்த திட்டம் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: