தேசிய கால்நடை இயக்க திட்டத்தில் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், செப்.28: தேசிய கால்நடை இயக்கம் - தொழில் முனைவோர் உருவாக்கல் திட்டம், ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையால் மறுசீரமைக்கபட்டு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கால்நடை இயக்கம் வேலைவாய்ப்பு உருவாக்குதலை முன்னிறுத்தி கால்நடை இனப்பெருக்கம் குறிப்பாக ஆடுகள், கோழிகள், பன்றிகள் இனப்பெருக்கம் மற்றும் தீவன உற்பத்தி ஆகியவற்றில் தொழில் முனைவோரை உருவாக்குவதன் மூலம் இறைச்சி, முட்டை, ஆட்டுப்பால், தீவனம் ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

கால்நடை மற்றும் கோழியின் இனமேம்பாடு மற்றும் இனப்பெருக்க துணை இயக்கம், தீவனம் மற்றும் தீவனப்புல் மேம்பாட்டு துணை இயக்கம், நூதன கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்க பணிகள் துணை இயக்கம் போன்ற துணை இயக்கங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தொழில் முனைவோராக பயனடைய விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனிநபர் தொழில் முனைவோர், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாய கூட்டுறவு அமைப்புகள், கூட்டு பொறுப்பு, செயல்பாட்டு குழுக்கள், சுய உதவிக் குழுக்கள், பிரிவு-8 நிறுவனங்கள் போன்ற பிரிவுகளில் ஒருவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில், 50 சதவீதம் மூலதன மானியமாக அதிகபட்சம் ரூ.25 லட்சம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் nlm.udyamimitra என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொழில் முனைவோராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: