மதுபழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

ஆவடி, செப். 27: ஆவடி பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (55). இவருக்கு ஒரு மகள்,  கார்த்திக்(26) என்ற ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி படப்பையில் வசித்து வருகிறார். கார்த்திக் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், மகாளய அமாவாசையை முன்னிட்டு,  தனது தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு சாப்பிடாமல், வேலைக்கு சென்றார்.  பின்னர், அவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்தார். மகாளய அமாவாசை அன்று, மகன் குடித்துவிட்டு வந்ததால் ஆத்திரமடைந்த லட்சுமி அவரை கண்டித்துள்ளார்.

இதனால்,  மன உளைச்சல் அடைந்த கார்த்திக் தனது அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். இந்நிலையில், வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த லட்சுமி ,அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது கார்த்திக் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: