மாவட்டத்தில் 88,045 பேருக்கு ரூ165.50 கோடி வழங்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 88,045 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ165.50 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு மற்றும் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா நான்காம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் 33 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 88,045 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ₹165 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 399 வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 3 லட்சத்து 89,358 குடும்பங்களுக்கு, காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்று(₹1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான) ஆகிய ஆவணங்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண்.32ல் செயல்பட்டு வரும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து விழிப்புணர்வு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு நினைவு பரிசு, புதியதாக சேர்க்கப்பட்ட 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட 3 மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ், மருத்துவக் காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் 8 பேருக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும், இதுகுறித்து நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 3 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவன், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். சங்கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.

ஸ்ரீதர், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வி, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் சையத் அலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வீட்டு பூட்டை உடைத்து ₹1 லட்சம், நகை கொள்ளை ஊத்தங்கரை, செப்.24: ஊத்தங்கரை அருகே, வீட்டு பூட்டை உடைத்து ₹1 லட்சம் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். நேற்று காலை, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு, அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே, புகுந்து பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ₹1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, வெளியூர் செல்லும் நபர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: