நார்வே கலாசாதனா நிறுவனத்துடன் தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், செப்.23: தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பண்பாட்டு மையத்துடன் நார்வே கலாசாதனா நிறுவனம் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நார்வே கலாசாதனா நிறுவனம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ் இலக்கியப்பாடல்களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு நாடுகளில் அரங்கேற்றி வருகின்றது. இவ்வகையில் தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ்ப்பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தின் பொழுது தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் கூறுகையில், நார்வே மற்றும் ஐரோப்பியநாடுகளில் தமிழிசையையும், தமிழ் நாட்டிய மரபினையும் மற்றும் தமிழர் கலைகளையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணமாகத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம்பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நார்வே கலாசாதனா நிறுவனத்தின் வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப்பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும் எனத் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் தியாகராஜன், நார்வே கலாசாதனா. நிறுவன இயக்குநர் கவிதா லட்சுமி ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக்கொண்டனர். நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு இயக்குநர் முனைவர் திலகவதி, தமிழ்ப்பண்பாட்டு மைய மைய இணை இயக்குநர் முனைவர் கற்பகம், உதவிப்பதிவாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: