தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும் அண்ணாமலையார் கோயில் பகுதியில் கிரிவலப்பாதை மேம்பாட்டுப் பணிகள் அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு

திருவண்ணாமலை, செப்.22: தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும், திருவண்ணாமலையில் கிரிவல மேம்பாட்டு பணிகள் தொடர்பாக, அண்ணாமலையார் கோயில் பகுதியில் அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு நடத்தினார்.

தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாகும். அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்லவும் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகின்றனர்.

எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக, கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அண்ணாமலையார் கோயில் வெளி பிரகாரம், மாட வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பக்தர்களுக்கான ஓய்வு அறைகள், சாமியார்கள் தங்கும் விடுதிகள் போன்றவற்றை முறையாக பராமரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த பணிகளை நிறைவேற்ற, பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கிரிவலப்பாதையின் 2 கி.மீ. தொலைவுக்கு ஒரு குழு வீதம் மொத்தம் 7 சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிவல மேம்பாட்டுப் பணிகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு நடத்தினார். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது, அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்ட தேங்காய், பழம், பூ, கற்பூரம் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பாதிக்காதபடி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், தற்போது தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை சீரமைத்து, அங்கு வாகனங்கள் நிறுத்தும் இடம் உருவாக்குதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துத்தருதல் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வின்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், எம்,பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி ஆணையர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: