விதிமீறலால் விபத்து அதிகரிப்பு: போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

திருப்பூர், செப்.22: திருப்பூர் மாநகர பகுதியில் போக்குவரத்து விதி மீறலால் விபத்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த போலீசார் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பனியன் வர்த்தகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலவானி ஈட்டித் தரும் திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நகரப்பகுதியில் ஏற்பட்ட அபரிதமான வளர்ச்சியால், இன்று தமிழகத்தின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஓடும், போக்குவரத்து மிகுந்த நகரமாகவும் உள்ளது.

 நகர வளர்ச்சிக்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டத்தில் ஏற்படும் நெரிசலால் தினமும் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். போதிய ரோடு வசதி இல்லாத திருப்பூருக்குள், வாகனங்களில் சென்று வருவது மக்களுக்கு பெரும் போராட்டமாக மாறிவிட்டது. போலீசார் ஏற்படுத்தும் வழித்தட மாற்றங்களால் நெரிசல் குறைவதும் இல்லை. திருப்பூர் சப்-டிவிஷனில் பொறுப்பேற்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய தலைவலியாக, முதல் பிரச்னையாக இருப்பதே, நகரின் போக்குவரத்து நெரிசல்தான். திருப்பூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்தோறும் சராசரியாக 50 முதல் 60 விபத்துகள் வரை நடக்கின்றன. 10 முதல் 15 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் பலருக்கு கை,கால் இழப்புகள் ஏற்படுகின்றன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுதல், மொபைல் போன்களில் பேசியபடி வாகனங்களை இயக்குதல் விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதிலும் குறிப்பாக இலைஞர்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. மிக அதிகமான வேகத்தில், கட்டுப்பாடின்றி வாகனங்களை ஓட்டுவதால் இவ்விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமுறையை பின்பற்றாமல் தாறுமாறாக வாகனங்களை இயக்குபவர்களால் அவர்கள் மட்டுமின்றி, ரோட்டில் செல்லும் மற்றவர்களும் குடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ள ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் அக்குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

கை, கால்களை இழந்தால் அவர்களது வாழ்க்கையே முடக்கப்பட்டுவிடும். நகரில் ஏற்படும் பல வாகன விபத்துகள், எதிர்பாராமல் நடந்த விபரீதமாக இல்லாமல், பல நேரங்களில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் செய்த மாபெரும் தவறுகளாகவே உள்ளன. சில நொடிகள் விழிப்புணர்வோடு, கவனமாக வாகனத்தை இயக்கினால் விபத்துகளை தவிர்க்கலாம். அசுரவேகமும், கட்டுப்பாடில்லாத இயக்கமுமே வாகனங்களின் மோதல்களுக்கு அதிக வாய்ப்பாகின்றன. ரோட்டோர ஆக்கிரமிப்புகள், ரோட்டில் உள்ள குழிகள், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள், கனரக வாகனங்களின் ஓட்டங்கள், நடந்து செல்லும் மக்களின் கூட்டம் என நகர ரோடுகள் சிக்கி கிடக்கின்றன.

இதில் தினசரி சென்று வர வேண்டிய கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள், விழிப்புணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டியது மிக அவசியம். வாகனங்களை இயக்குபவர்தான் மட்டுமின்றி, ரோட்டில் செல்லும் மற்றவர்களின் உயிரும், உடமையையும் காக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தனக்கு உண்டு என்ற விழிப்புணர்வோடு செயல்பட்டால் மட்டுமே விபத்துகளை தவிர்க்கவும், தடுக்கவும் முடியும். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாநகரில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், முக்கிய வழித்தடங்கள் ஒரு வழிப்பதையாகவும், பிரதான ரோடுகள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பார்க்கிங், ‘நோ பார்க்கிங்’ ஏரியாக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய ரோடுகளில் காலை நேரங்களில் கனரக வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகரில் முறையற்ற போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளால், விபத்து அபாயம் ஏற்படுகிறது. குமார்நகர் 60 அடி ரோடு நடராஜ் தியேட்டர் ரோடு, பி.என்.ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் ஒரு வழிப்பாதையில், விதி மீறி அதிவேகமாக வாகனங்கள் இயக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டன. அதிக வேகம், மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குவது, அஜாக்கிரதையாக சைகைகள் காண்பிக்காமல் வாகனத்தை திருப்புவது போன்றவைகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்களால், சாலைகளில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அச்சமாக உள்ளது. போக்குவரத்து விதிமீறலை தடுக்க, போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பு அவசியம். ‘ஒன்வே’ அதிவேகம் கண்காணித்தால் விபத்துக்கள் குறையும் என்றார்.

Related Stories: