திருப்பூரில் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பூர், ஆக. 8: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் வினீத் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார். அப்போது கலெக்டர் வினீத் பேசியதாவது:- இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவு தொழிலாகும். இந்த தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடைய செய்யவும் வகையில் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கைத்தறி ஆணையரால் 8-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சியை நடத்த அறிவுறுத்தினார். அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 நாட்கள் சிறப்பு கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்டுகள், துண்டு வகைகள், மிதியடிகள் மற்றும் பட்டு அங்கவஸ்திரங்கள் போன்ற சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கலந்துகொண்டன. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும். கைத்தறி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசால் அனுமதிக்கப்படும் 20 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருப்பூர் சரகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வயதான (60 வயதுக்கும் மேற்பட்ட) நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கியும், மாநில அளவில் விருது பெற்ற சிறந்த வடிவமைப்பாளர் கோவில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வடிவேலுவுக்கும், சிறந்த நெசவாளர் விருது பெற்ற சுமதி, திறன்மிகு நெசவாளர் விருது பெற்ற தந்தை பெரியார் கோவில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த தமிழ்செல்வி ஆகியோருக்கு பரிசு மற்றும் சால்லவைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெற்றிவேல், கணதிபாளையம் தந்தை பெரியார் கோவில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி, கைத்தறி அலுவலர் பிரேமலதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: