தவணை பணம் செலுத்தாத வேன் உரிமையாளருக்கு அடி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கள்ளம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மன். (50). இவர் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி வேன் வாங்கியிருந்தார். தவணை பணத்தை சரியாக செலுத்தவில்லையாம். இதுபற்றி, தனியார் நிதி நிறுவனத்தினர் கேட்டபோதும், இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால், வேனை பறிமுதல் செய்து வரும்படி ஊழியர்களுக்கு நிதி நிறுவன உரிமையாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த 27ம் தேதி வேனை தேடியுள்ளனர். மப்பேடு அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் வேனில் வந்து கொண்டிருந்தார்.

உடனே வெள்ளவேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் வேனை நிறுத்தி, நிதி நிறுவன உரிமையாளர் கூறிய தகவலை கூறி வேனை பறிமுதல் செய்ய முயன்றனர். தர்மன், மறுத்துள்ளார். அந்த நேரத்தில், கார்த்திக்குடன் வந்தவர், தர்மன் பாக்கெட்டில் இருந்த 20,500 ரூபாயை எடுத்து கொண்டார். பின்னர் உருட்டுக்கட்டையால் தர்மனை தாக்கினர். பலத்த காயத்துடன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 7 பேரும் தப்பி விட்டனர். காயமடைந்த தர்மனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து 8 பேரைதேடி வருகின்றனர்.

Related Stories: