ஆடி அமாவாசையை முன்னிட்டு திருமூர்த்திமலை கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலை, ஜூலை 30: ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று திருமூர்த்திமலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோயில், திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் உள்ளிட்டவை உள்ளன. இதனால், இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுதவிர, தை அமாவாசை, ஆடி அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கோயிலில் கூட்டம் அதிமாக இருக்கும்.

அதன்படி, ஆடி அமாவாசை தினமான நேற்று திருமூர்த்திமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உடுமலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பஞ்சலிங்க அருவி மற்றும் தடாகத்தில் குளித்து சென்றனர்.

சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்திருந்தனர். நேற்று முன்தினம் மதியம் முதலே வந்த விவசாயிகள், அணை கரையோரம் மாட்டு வண்டிகளை நிறுத்தி தயாராயினர். இதையடுத்து நேற்று கால்நடைகளுக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால், அப்பகுதி களைகட்டி காட்சியளித்தது.

Related Stories: