திருமங்கலத்தில் காமராஜர் பல்கலை.யின் தொலைநிலை கல்வி நேரடி சேர்க்கை மையம் துவக்கம்

திருமங்கலம், ஜூலை 28: மதுரை மாவட்டத்தில் 3வது மையமாக திருமங்கலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி சேர்க்கை மையம் துவக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி நேரடி சேர்க்கை மையம் பல்கலைக்கழகத்திலும், மதுரை தல்லாகுளம் பல்கலைக்கழக கல்லூரியிலும் செயல்பட்டு வருகிறது. தற்போது 3வது மையமாக திருமங்கலத்தில் மற்றொரு மையம் துவக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் கப்பலூரில் அமைந்துள்ள அரசு கலை- அறிவியல் கல்லூரியில் புதியதாக காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மாணவர் நேரடி சேர்க்கை மையம் துவக்கப்பட்டுள்ளது.

தொலைநிலை கல்வி கற்க விரும்பும் மாணவ, மாணவியர்களின் வசதிக்காக இளங்கலை பாடப்பிரிவுகளில் 25 பட்டப்படிப்புகளும், முதுகலை பாடப்பிரிவுகளில் 23 பட்டப்படிப்புகளும், எம்பிஏ எனப்படும் மேலாண்மை நிர்வாகம் பட்டத்தில் 17 உட்பிரிவு பட்டப்படிப்புகளும், முதுகலை பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அனைத்திற்கும் திருமங்கலத்தில் கப்பலூர் கல்லூரி வளாகத்திலேயே நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். தொலைநிலை கல்வி பயிலும் மாணவர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் பேராசிரியர்கள் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

திருமங்கலம் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொலைநிலை கல்வி மாணவர் நேரடி சேர்க்கை முகாம் துவக்க விழாவிற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன், தொலைநிலை கல்வி முன்னாள் இயக்குனர் வடிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பல்கலைக்கழக டீன் சதாசிவம், தொலைநிலை கல்வி இயக்குனர் ராமசாமி, இணை இயக்குனர் பிரபாகரன், திருமங்கலம் கப்பலூர் கல்லூரி முதல்வர் உமாராஜ், தமிழ்த்துறை தலைவர் கீழடி கருமுருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இதுகுறித்து எடுத்துரைத்தனர். வயது வரம்புகள் இன்றி தொலைநிலை கல்வி சேர்க்கை மையத்தில் இணைந்து பட்டப்படிப்புகளை படிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: