முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்

குளச்சல், ஜூன் 14: முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் முட்டத்தில் கடந்த 6ம்தேதி கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி (48) மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் (91) ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் ஆகியோர் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தன. நகைக்காக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்த நகைகள் அப்படியே இருந்தன. எனவே வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரிக்க தொடங்கினர்.

 இதில் பவுலின் மேரியை ஏற்கனவே பலமுறை கஞ்சா கும்பல் மிரட்டிய தகவல் தனிப்படைக்கு கிடைத்தது. கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, தனது வீட்டு மாடியில் தையல் பயிற்சி மையம் நடத்தி வந்தார். அவரிடம் ஏராளமான இளம்பெண்கள் தையல் படித்து வந்தனர். அவ்வாறு இளம்பெண்கள் வரும் போது அந்த பகுதியில் கஞ்சா போதை கும்பல் அமர்ந்து இடையூறு ஏற்படுத்தினர். இது தொடர்பாக வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் பவுலின் மேரி புகார் அளித்தார். இந்த புகார் தான் தற்போது அவரது கொடூர கொலைக்கு பின்னணியாக இருக்கும் என கூறப்பட்டது.

இது தொடர்பான தகவலுக்கு பிறகு கஞ்சா போதை கும்பலை போலீசார் தேட ெதாடங்கினர். இதில் பலர் தலைமறைவானார்கள். அவர்களை பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி சுற்றி வளைத்தனர். இதில் தற்போது 2 பேர் சிக்கி உள்ளனர். இவர்களிடம் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கஞ்சா கும்பல் தான், இந்த கொலைகளை செய்தது தெரிய வந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டுக்குள் நுழைந்த கும்பல், எங்களை பற்றி எப்படி போலீசிடம் தகவல் கூறுவாய் என கூறி பவுலின் மேரியை தாக்கி உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த அயன் பாக்சை எடுத்து தலையில் சரமாரியாக அடித்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு வந்த திரேசம்மாளையும் தாக்கி உள்ளனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலேயே வீட்டில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, சாவி கதவில் இருந்ததால் வீட்டை வெளி பக்கமாக பூட்டி விட்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்னும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடைய இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை முறையாக சென்று கொண்டிருக்கிறது. சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Stories: