ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராசிபுரம், ஜூன் 4: ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று தனியார் பள்ளிகளின் 255 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 9 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் வருகிற 13ம்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்டந்தோறும் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்து, தகுதிச்சான்று வழங்கும் பணி துவங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை, கலெக்டர் ஸ்ரேயா சிங் துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் வாகனங்கள், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., பள்ளி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இதில், 35 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 255 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 9 வானங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. அவற்றை நிவர்த்தி செய்து வரும்படி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

துணை போக்குவரத்து ஆணையர் சுபாஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், ராசிபுரம் டிஎஸ்பி (பொ) முத்துகிருஷ்ணன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ஆகியோர் கொண்டு குழு, அரசு விதிமுறைகளின் படி வாகனங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா கூறுகையில், ‘ஓட்டுனர்களுக்கு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்யப்பட்டது. பள்ளி வாகனத்தின் முகப்பு கண்ணாடியில், வாகனத்தின் ஓட்டுனரின் உடல்தகுதி, வாகனத்தின் உறுதித்தன்மை போன்றவை குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படும். அந்த ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல தகுதியற்றவை,’ என்றார்.

Related Stories: