மணிக்கூண்டு பகுதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி

ஊட்டி, மே 28:  ஊட்டி மார்கெட் மணிக்கூண்டு முதல் ஏடிசி பஸ் நிலையம் வரை சாலையில் முறையற்று வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.ஊட்டி நகரின் மையப்பகுதியாக ஏடிசி பகுதி விளங்கி வருகிறது. இங்குள்ள ஏடிசி நகராட்சி மார்கெட் வளாகத்தில் காய்கறி கடைகள், மருந்து கடைகள், புத்தக கடைகள், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்க ஏராளமானோர் நாள்தோறும் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால், இந்த பகுதி எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இந்த மார்கெட்டின் அருகில் மணிக்கூண்டு உள்ளது. இவ்வழியாக செல்லும் லோயார் பஜார் சாலையில் வாகனங்கள் சென்று வரும். இந்நிலையில், மணிக்கூண்டு பகுதியில் இருந்து ஏடிசி பஸ் நிலையம் வரை உள்ள சாலையில் சிலர் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். இதனால், சீராக வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் தும்மனட்டி, கப்பச்சி, இடுஹட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் மினி பஸ்கள் நிறுத்தும் இடங்களிலும் வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர். தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டி நகருக்குள் அதிகளவு வாகனங்கள் வருகின்றன. இப்பகுதியில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இங்கு தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: