கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

ஆலந்தூர்: கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து ஒரத்தநாடு திருமண நிகழ்ச்சிக்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை கிண்டியில் செயல்படும் பிரபல பிரியாணி நிறுவனத்தில், தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் திருமண விழா நடத்தும் ஒருவர் தனது நிகழ்ச்சிக்கு 3.6 டன் ஆடு மற்றும் கோழி இறைச்சி ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த பிரியாணி நிறுவனம், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள இறைச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஒரத்தநாடு திருமண நிகழ்ச்சிக்காக 3.6 டன் கோழி மற்றும் ஆடு இறைச்சியை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளது.

இதனையடுத்து, மாண்டியாவில் உள்ள இறைச்சி நிறுவனம், 3.6 டன் கோழி மற்றும் ஆடு இறைச்சியை பதப்படுத்திய வாகனத்தில்  ஒரத்தநாட்டில் உள்ள திருமண வீட்டிற்கு அனுப்பியுள்ளது. அங்குள்ள சமையல்காரர்கள் கர்நாடகாவில் இருந்து வந்த இறைச்சியை திறந்து பார்த்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சமைப்பதை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, திருமண வீட்டார், கிண்டியில் உள்ள பிரியாணி நிறுவனத்தை கண்டித்ததுடன், கெட்டுபோன இறைச்சியை அந்த நிறுவனத்திற்கே வாகனத்தில் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனிடையே கிண்டியில் உள்ள பிரியாணி நிறுவனத்தினர், கர்நாடகாவில் உள்ள இறைச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால், பிரியாணி நிறுவனத்தினர் கெட்டுபோன இறைச்சி கொண்டுவந்த வாகனத்தை நேற்று பிடித்து வைத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, லாரியில் இருந்த இறைச்சியை ஆய்வு செய்து, அவை அழுகி இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, சுமார் 3.6 டன் இறைச்சியை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்நாடக இறைச்சி நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Related Stories: