படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் ஊட்டி மலர் கண்காட்சி நாளை துவக்கம் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலை., கட்டிட முகப்பு தோற்றம்

ஊட்டி, மே 19: மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்ட வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டு வருகிறது. `ஊட்டி 200’, நீலகிரியில் வசிக்கும் பழங்குடியினரின் உருவங்கள் கொய்மலர்களை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நாளை (20ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் 124வது மலர் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி, சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கிறது. 35 ஆயிரம் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட உள்ளது.

மேலும், பல ஆயிரம் தொட்டிகள் புது பூங்காவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை 124வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு கோவை வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, இம்முறை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொய்மலர் விவசாயிகளிடம் இருந்தும் கொய்மலர்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், 6 பழங்குடியின மக்களின் உருவங்கள் கொய்மலர்களை கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.

`ஊட்டி 200’ ஆண்டை முன்னிட்டு ஊட்டி 200 என்ற சிறப்பு மலர் அலங்காரங்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில், பல வகையான கார்ட்டூன் வடிவ அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இதுதவிர, மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்படுகிறது. பல்வேறு மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதை தவிர, 15 தனியார் மற்றும் அரசுத்துறை அரங்குகள், போட்டியாளர் அரங்கும் அமைக்கப்படும். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்களை அமைத்து போட்டிக்காக பதிவு செய்துள்ளனர். சிறந்த பூங்காவிற்கான சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது.

Related Stories: