இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ஏப் 22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2022-23ம் கல்வி ஆண்டிற்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை (எல்கேஜி, 1ம் வகுப்பு) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் வருகிற மே மாதம் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். குடியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பள்ளி இருக்க வேண்டும்.

எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்க குழந்தைகள் 1-8-2018 முதல் 31-7-2019க்குள் பிறந்திருக்க வேண்டும்.1ம் வகுப்பிற்கு 1-8-2016 முதல் 31-7-2017-க்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமைய அலுவலகங்களில் எந்தவித கட்டணமும், இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மாணவரின் புகைப்படம், பிறப்பு சான்று, பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதிச்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் மே மாதம் 23ம் தேதி அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடைபெறும். பெற்றோர்கள் தாங்கள் சேர்க்க விரும்பும் பள்ளிக்கு சென்று கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: