போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு

ஈரோடு,ஏப்.22: ஈரோடு போக்குவரத்து பூங்காவில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் மோளகவுண்டன்பாளையத்தில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்கப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.

இந்த போக்குவரத்து பூங்காவில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம்(டிரைவிங் லைசன்ஸ்) பெற விண்ணப்பிப்போருக்கும் இங்கு விதிமுறைகள் குறித்து விளக்கிட போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் முதல் இந்த பூங்கா மூடப்பட்டது. அதன்பின் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை.

கொரோனா பரவல் குறைந்ததையொட்டி பூங்காக்களை திறக்க அரசு அனுமதித்தது. இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் பூங்கா திறக்கப்பட்டு ஆயுதப்படை போலீசார், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பராமரிப்பு பணிகளும், தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் போக்குவரத்து பூங்காவிற்கு நேற்று தனியார் பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 100பேர் போலீசாரால் அழைத்து வரப்பட்டனர். அவர்களுககு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. சசிகலா, மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தல் குறித்து ஏ.சி. அறையில் மாணவ,மாணவிகளுக்கு திரையில் விழிப்புணர்வு படக்காட்சிகள் திரையிடப்பட்டு, விளக்கங்களும் அளிக்கப்பட்டது.  மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் வாகனங்களை இயக்குவதால் பெற்றோருக்கான சட்டபூர்வ தண்டனைகள் குறித்தும் விளக்கினர். இதேபோல் போக்குவரத்து பூங்காவிற்கு தினந்தோறும் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் அழைத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: