சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி

சேத்துப்பட்டு, மார்ச் 26: சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேத்துப்பட்டு அடுத்த கங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(60). இவரது மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், முனுசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன்(65) ஆகியோர் பைக்கில் நிலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் உள்ள சமத்துவபுரம் செல்லியம்மன் கோயில் அருகே வந்தபோது, சேத்துப்பட்டிலிருந்து ஆரணி நோக்கி வேகமாக வந்த கார், எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் முனுசாமி, அரங்கநாதன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைகாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அரங்கநாதன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முனுசாமியின் மகன் ராஜா, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: