நாமக்கல், மார்ச் 26: நாமக்கல்லில் கல்லுாரி மாணவியருக்கு அரசின் சார்பில் விடுதி ஏற்படுத்த வேண்டும் என சட்டசபையில் எம்எல்ஏ ராமலிங்கம் கோரிக்கை விடுத்தார்.நாமக்கல் சட்டமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தின் போது ராமலிங்கம் எம்எல்ஏ பேசியதாவது: நாமக்கல்லில் செயல்பட்டு வரும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்த இந்த கல்லூரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் 750க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்து, வெளியில் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். அவர்களுக்காக தனியாக எந்த ஒரு விடுதிகளும் இல்லை. எனவே பிற்பட்டோர் நலத்துறை மூலம் மாணவியர் தங்குவதற்கு விடுதி அமைத்து தர வேண்டும். இவ்வாறு ராமலிங்கம் எம்எல்ஏ பேசினார்.
