குறைந்தளவு காசநோய் தொற்று நீலகிரிக்கு வெள்ளிப்பதக்கம்

ஊட்டி, மார்ச் 25:  நாடு  முழுவதும் நடத்தப்பட்ட காசநோய் தொற்று குறைவாக உள்ள பகுதிகளை கண்டறியும்  கணக்கெடுப்பில் நீலகிரி மாவட்டம் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளது. உலக  காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று  நடந்தது. ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித்  தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்  பேசியதாவது: மாவட்டத்தில்  நடமாடும் நுண்கதிர் பரிசோதனை வாகனம் மூலம் கிராம் கிராமமாக சென்று சர்க்கரை  நோயாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், காய்ச்சல் போன்ற  அறிகுறி உள்ளவர்களை பரிசோதனை செய்து காசநோய் இல்லாத மாவட்டமாக  மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார்  மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் காசநோய் பயனாளிகளுக்கும் உலக  தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. காசநோய் சிகிச்சை  பெற்று வரும் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவிதொகையாக மாதம் ரூ.500  வழங்கப்பட்டு வருகிறது, சமீபத்தில் என்ஐஆர்டி, ஐசிஎம்ஆர், இந்தியா முழுவதும் நடத்திய காசநோய்  தொற்று குறைவாக உள்ள பகுதிகளை கண்டறியும் போட்டியில் பங்கு பெற்று  நீலகிரியில் உள்ள 15 கிராமங்களை தேர்வு செய்து நடத்திய காசநோய் கண்டறியும்  கணக்கெடுப்பில் நீலகிரி மாவட்டம் வெள்ளி பதக்கம் பெற்று உள்ளது  இவ்வாறு அவர் பேசினார். இதில், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, செவிலியர் பயிற்சி  கல்லூரி, ஜேஎஸ்எஸ், பார்மசி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள்  பங்கேற்றனர். பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில்  கட்டுரை, பேச்சு, குறும்படம் தயாரித்தல், ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மருத்துவ  கல்லூரி முதல்வர் மனோகரி, துணை இயக்குநர்கள் பாலுச்சாமி, சக்திவேல்,  காசநோய் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: