முகாம் சிறையில் தகராறு நைஜீரியா நாட்டு கைதியை தாக்கிய மற்றொரு கைதி கைது

திருச்சி, பிப். 18: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள், வங்கதேசம், கென்யா, ரஷ்யா, சூடான், நைஜீரியன், ஐவரிகோஸ்ட் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் உள்ளவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் சட்டவிரோதமாக தங்கி இருத்தல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டவர்கள். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற வழக்குகளில் சிக்குபவர்கள் திருச்சியில் உள்ள முகாம் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முகாம் சிறையில் நைஜீரியாவை சேர்ந்த ஜூஜூடேவிட் என்பவருக்கும், ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த உச்சன்கிறிஸ் என்பவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே அறையில் இருந்த நிலையில் அறையை காலி செய்வது தொடர்பாக இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் தாக்கியதில் நைஜீரியாவை சேர்ந்த ஜூஜூடேவிட் காயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் நேற்று ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த உச்சன்கிறிஸ் மீது வழக்குபதிந்த கே.கே.நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: