நகராட்சி அலுவலகத்தில் தடுப்புகள் அமைப்பு அரியலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறலாம்

அரியலூர், ஜன.28: விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர இலாபத்தினை உயர்த்திடவும் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 ம் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளது.

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் (Uzhavan app) பதிவு செய்திட வேண்டும். பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளமான www.agrimachinery.nic.in-ல் இணைக்கப்படும். விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளையும் ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் (டீலர்) தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தேர்வுசெய்யலாம். விவசாயிகள் முகவரின் விற்பனை விலையை பேச்சுவார்த்தை மூலம் பேரம் பேசி குறைத்திடலாம். குறைக்கப்பட்ட விலைக்குரிய மானியம் இணையதளத்திலேயே கணக்கிடப்படும்.

குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இலக்கு முடிவுற்ற பின்னர் விவசாயிகள் அதே இயந்திரம் அல்லது கருவியை தேர்வுசெய்தால், அவர் 1,2,3 என எண்ணிடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவர். ஏற்கனவே 2020-21 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மூதுரிமை விண்ணப்பங்கள் நடப்பு ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, இவ்வாண்டிற்கு விண்ணப்பங்கள் புதிதாக பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்குத் தேவைப்படும் ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளை மட்டுமே மானியவிலையில் விவசாயிகள் வாங்கிட இயலும். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் வாங்கிட இயலும். உதவி செயற் பொறியாளர் (வே.பொ), உதவிப் பொறியாளர் (வே.பொ), இளநிலைப் பொறியாளர் (வே.பொ) ஆகியோர் விவசாயிகளின் நிலத்திற்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வர்.

மேலும் விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்கள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்களால் சரிபார்க்கப்படும்.

ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதியாக விவசாயியின் வங்கி கணக்கில் உரிய மானியமானது ஆய்வு முடிந்த 10 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 1 எண் டிராக்டர், 3 எண்கள் ரோட்டவேட்டர் என்று அழைக்கக் கூடிய சுழற் கலப்பைகள், 18 எண்கள் பவர் டில்லர்கள், 2 எண் விசையால் களையெடுக்கும் கருவி, 8 எண்கள் தெளிப்பான் வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.20.66 இலட்சங்கள் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அரியலூர் மற்றும் உதவி செயற்பொறியாளர்(வே.பொ) ஜெயங்கொண்டம் அலுவலகத்தினை அணுகலாம். இவ்வாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தெரிவித்துள்ளார்.

Related Stories: