நல்லூர் அருகே மதுபோதையில் 5 பேர் மீது தாக்குதல்

திருப்பூர்:  திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் அருகே மதுபோதையில் 5 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் நேற்று முன் தினம் இரவு மது அருந்திய ஆசாமி ஒருவர் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை பொதுமக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தொடர்ந்து அங்கிருந்து சென்று, தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து அந்த பகுதியை சேர்ந்த செல்வராம், மணிகண்டன், பாபு, சுந்தரம், காளிமுத்து ஆகிய 5 பேரை கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கிவிட்டு, தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பியோடிய கும்பலை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, அந்த பகுதி பொதுமக்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு காங்கேயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நல்லூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பொதுமக்களிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பலூரை சேர்ந்த பிரசாந்த் (22), பிரதீப் (22), மூணாறை சேர்ந்த ராஜேஷ் (24), சேலத்தை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (27) ஆகிய 4 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: