கொலை, ஆள்கடத்தல் என 48 வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி படப்பை குணா கோர்ட்டில் சரண்: போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட 48 வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி படப்பை குணா, நேற்று மதியம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா. இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மதுரமங்கலத்தில் சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், இவர்மீது ஒரகடம், மறைமலைநகர், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 8 கொலை, 9 கொலை முயற்சி, 6 கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்பட 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், ரவுடி குணா தலைமறைவாக சுற்றி திரிந்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக இருந்த 2 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபல ரவுடிகளை கைது செய்யும் பணியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, பிரபல ரவுடி குணா என்கவுன்டர் செய்யப்படலாம் என தகவல் பரவியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவுடி குணாவின் மனைவி மனுதாக்கல் செய்து முறையிட்டார். இதையடுத்து, ரவுடி குணாவை என்கவுன்டர் செய்யும் எண்ணம் இல்லை. அவர் பல்வேறு வழக்கு விசாரணை தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். அவரை கைது செய்து விசாரிக்கவே தேடி வருகிறோம் என போலீசார் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் பிரபல ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: