கூடுதல் கால்நடை தீவன தொழிற்சாலை திறப்பு

ஈரோடு, ஜன.22:  ஈரோடு-சென்னிமலை சாலையில் உள்ள ஆவின் நிறுவனம் மூலமாக கால்நடை தீவன உற்பத்தி தொழிற்சாலை கடந்த 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம், நாளொன்றுக்கு 150 டன் தீவனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது, அதே வளாகத்தில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் மேலும் 150 டன் கலப்பு தீவனம் உற்பத்தி செய்யும் கூடுதல் அலகினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம், தினமும் 300 டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்ய முடியும். இதனால் 1 லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெற முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, இனி கலப்பு தீவன பற்றாக்குறை என்பது இருக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:  ஈரோட்டில் உள்ள ஆவின் தீவன ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவனங்கள் தான் மாநில அளவில் அனைத்து மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது, கூடுதல் அலகு திறக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு இன்றி கலப்பு தீவனங்களை விவசாயிகளுக்கு சொசைட்டிகள் மூலம் வழங்க முடியும். அதே வேளையில், ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு என்று மதுரை கப்பலூரிலும், வட மாவட்டங்களுக்கு ஆம்பூரிலும் இதே போல ஆவின் தீவன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டு பின்னர் செயல்படுத்தாமல் மூடி கிடக்கின்றது. எனவே, அந்த 2 ஆலைகளையும் மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். 2 ஆலைகளும் செயல்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு தேவையான அளவு கலப்பு தீவனங்களை வழங்க முடியும் என்பதோடு, பால் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: