பட்டிவீரன்பட்டி, ஜன.20: பட்டிவீரன்பட்டி அருகே வயல்களில் டிரோன் மூலமாக மருந்தடிக்கும் பணி நடைபெறுகிறது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தாமரைகுளம், கருங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்களில் உள்ள நீரைக்கொண்டு பட்டிவீரன்பட்டி, அய்யன்கோட்டை, நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி, அய்யம்பாளையம் கால்பரவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதியில் கோ 51, கோ 43, கோ 45 மற்றும் ஐ.ஆர் 20 போன்ற 4 வகையான நெல் ரகங்கள் பயிடப்பட்டுள்ளன. இதில் கோ 51, கோ 45 ஆகிய 2 ரகங்களும் 120 நாட்களில் விளையும், கோ 51 ரகம் 130 நாட்களில் விளையும். தற்போது முதல் போக சாகுபடிக்காக நெல் பயிரிட்டுள்ளது. இந்த வருடம் நெல் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அமோக விளைச்சலுக்கு வாய்ப்புள்ளதாகவும் நெல்விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
