பட்டுக்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் கொரோனா 56 பேருக்கு தொற்று

பட்டுக்கோட்டை, ஜன.19: கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியிலும் கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று பட்டுக்கோட்டை கண்டியன்தெரு கணபதி நகரை சேர்ந்த சுமார் 23 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் கே.ஓ.என். பாளையம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கும், நாடிமுத்துநகரை சேர்ந்த 34 வயதுடைய ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி முழுவதையும் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் நேற்று தொற்று பாதிக்கப்பட்ட 3 பேரையும் சேர்த்து 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 8 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 9 பேரும், தஞ்சாவூர் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் ஒருவரும், பட்டுக்கோட்டை கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 4 பேரும், டாக்டர்கள் அறிவுரைப்படி அவரவர் வீடுகளில் 34 பேரும் என மொத்தம் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் தற்போது வரை குலால் தெரு மற்றும் மேலத்தெருவில் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் 3 குடும்பங்களுக்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டதால் நகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தகரங்கள் கொண்டு அடைத்து, சீல் வைத்து அந்த தெருவை தனிமைப்படுத்தியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொற்று பாதிக்கப்பட்ட 56 பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 1,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: